புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.;
சிறப்பு அலங்காரம்
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதனால் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் மதியம் உற்சவர்களான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு உற்சவர் மதனகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்ததோடு, உலா வந்தார். கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
திருமஞ்சனம்
வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் மூலவர் பெருமாளுக்கு மகா அபிஷேகம் எனப்படும் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். அவர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மலையில் உள்ள பூ மலை சஞ்சீவிராயருக்கும், மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்நேயருக்கும் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.