பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

Update: 2022-10-08 16:07 GMT

திருவண்ணாமலை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படும்.

மேலும் சனிக்கிழமையன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் அமைந்து உள்ள பூதநாராயண பெருமாள் கோவில், அண்ணா நுழைவு வாயில் அருகில் பெருமாள் கோவில், பல்லவன் நகரில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெருமாள் கோவில்களில் நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி திருவண்ணாமலையில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் விரதம் இருந்து மதியம் சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.

செங்கம்

செங்கத்தில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சிறப்பாக அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

மூலவர், உற்சவர் மற்றும் கோவில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே படவேடு கோட்டைமலை மீது 2,660 அடி உயரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை நேரத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை காண திரளான பக்தர்கள் இரவிலேயே கோவிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர். உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து உட்பிரகார உலாவும், மாலையில் படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் சார்பில் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

ஜவ்வாதுமலை அருகே நம்மியம்பட்டு கிராமம் அருகே மலையில் வெள்ளாண்டப்பன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இங்கு மலைப்பகுதியில் உள்ள பாறையை வெள்ளாண்டப்பனாக பாவித்து மக்கள் ஆண்டுதோறும் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை மட்டும் சென்று வழிபாடு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தவாசி

வந்தவாசி அருகே நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரவல்லி சமேத சுந்தரவரத பெருமாள் கோவிலில் பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் விசேஷ திருமஞ்சன திரவியங்கள் கொண்டு அனைத்து சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் புது வஸ்திரம் மற்றும் நூதன திருவாபரணங்கள், பூ மாலைகள் சாற்றி கோவில் வெளி பிரகாரத்தில் திருப்பதி மலையில் உள்ள சீனிவாச பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் போல் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்