பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-01 19:31 GMT

ஆலங்குளம்,

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனி

காக்கும் கடவுளான பெருமாளுக்கு புரட்டாசி மாதம் மிகவும் உகந்தது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷம். இந்த திருநாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் நாம் வேண்டிய நற்காரியங்கள் நிறைவேறும். பெருமாளின் திருவருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் கட்டையாபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விருதுநகர் கச்சேரி ரோட்டில் காளியம்மன் கோவிலில் உள்ள அபய ஸ்கந்த ஆஞ்சநேயர் ரூபாய் நோட்டு சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சுவாமி முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருச்சுழி

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் உள்ள பெருமாளுக்கு புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குகன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்

வரதராஜ பெருமாள்

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், தயிர், இளநீர், தேன் உள்பட 18 பொருட்கள் அடங்கிய அலங்கார பூஜை நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவிலில் காக்கி வாடன்பட்டி நாராயண பெருமாள் கோவில், புலிப்பாரைப்பட்டி வரதராஜபெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில், கீழராஜகுலராமன், ராஜகுல பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனி வார திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராஜபாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் அலுவலகத்தில் வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சாத்தூரில் புரட்டாசி மாத 2-ம் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சாத்தூரப்பன் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதே போல் நென்மேனியில் உள்ள பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்