பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை :திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தின் 2-ம் சனிக்கிழமையான நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
வளவனூர்- கோலியனூர்
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அக்ரஹாரத்தில் உள்ள அமிர்தவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவர், உற்சவ பெருமாளுக்கும், பின்னர் வெங்கடாஜலபதி பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு புஷ்ப துளசி அலங்காரம் செய்யப்பட்டும், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வெங்கடாஜலபதிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோலியனூர் வரதராஜபெருமாள் கோவிலில் காலை 8 மணிக்கு மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மூலவர் வரதராஜ பெருமாளுக்கு உப்பிலியப்பன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அர்த்தமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரசமங்கலம் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
செஞ்சி
செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி திருப்பாவாடை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்து திருப்பாவாடை உற்சவத்தை முன்னிட்டு அன்னப் படையல் ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைபோன்று செஞ்சி பீரங்கி மேடு ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவலில் அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இதே போல் செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,