பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-23 17:12 GMT

புரட்டாசி முதல் சனிக்கிழமை

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆன்மிகம் நிறைந்த மாதமாகும். வைணவ கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய விசேஷ நாளாகும். இதனால் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் கூடியது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே வரை நீண்ட வரிசையில் நின்றனர். வெயிலின் காரணமாக சிலர் குடையை பிடித்தப்படி நின்றதை காணமுடிந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் கோவிலுக்குள் வரிசையாக செல்ல தடுப்பு கட்டைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கட்டணம் தரிசன பாதை தனியாவும், இலவச பொது தரிசன பாதை தனியாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பக்தர்கள் சென்று சாமியை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல உற்சவர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் சேவை அளித்தார். கோவிலில் பிற சன்னதிகளிலும் சக்கரத்தாழ்வார், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல நகரில் உள்ள பிற பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமயம், மணமேல்குடி

திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைெயாட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சத்தியமூர்த்தி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மணமேல்குடியில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் ஆதிகேசவபெருமாள் கோவில், விச்சூர் வரதராஜ பெருமாள் கோவில், வெள்ளுர் சுந்தரராஜபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கீரனூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. களமாவூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில், மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது.

Tags:    

மேலும் செய்திகள்