அவ்வையார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி:
ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அவ்வையார் அம்மன் கோவில்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இம்மாதங்களில் அம்மன் கோவில்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குமரி மாவட்டத்தில் நேற்று முதலாவது ஆடி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவில் மற்றும் பிற அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அந்த வகையில், செண்பகராமன்புதூர் அருகே பூதப்பாண்டி செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அவ்வையார் அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உள்ளூர், வெளியூர் மற்றும் கேரளாவில் இருந்தும் பெண்கள் திரளாக வந்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய் நேற்று தொடங்கியது.
சிறப்பு பூஜை
இதையொட்டி காலையில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பெண்கள் குடும்பம், குடும்பமாக வாகனங்களில் அவ்வையார் அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும் அருகில் உள்ள தோப்புகளில் தாங்கள் கொண்டுவந்த பொருள்களை கொண்டு கூழ், கொழுக்கட்டை ஆகியவற்றை தயாரித்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இ்வ்வாறு அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் வரும் தடங்கல்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து அம்மனுக்கு மதியம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாழக்குடி மற்றும் செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அம்மன் கோவில்களில்...
இதுபோல, குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவில், ஆலமூடு இசக்கியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.