சிவன் கோவில்களில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
நாகை மாவட்ட பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்ட பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீலாயதாட்சியம்மன் கோவில்
நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
நாகூர்
அதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில் வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜசாமி கோவில் (அஷ்ட பைரவர்) உள்ளிட்ட கோவில்களிலும் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல மறைக்காடர் கோவிலில் கால பைரவருக்கு வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. இதில் பெரிய குத்தகை ஆனந்த் சிவச்சாரியார் தலைமையில் நடந்த இந்த யாக பூஜையின் முடிவில் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திட்டச்சேரி
திட்டச்சேரி அருகே சீயாத்தமங்கையில் உள்ள வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.