ரூ.44 லட்சத்துடன் மாயமான வங்கி காசாளரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
ரூ.44 லட்சத்துடன் மாயமான வங்கி காசாளரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் காசாளராக பணியாற்றி வருபவர் நேற்று முன்தினம் காலை ரூ.43 லட்சத்து 89 ஆயிரத்துடன் வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வங்கிக்கும் வரவில்லை, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை. இதுகுறித்து வங்கி கிளை மேலாளர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே அந்த வங்கி காசாளர், தனது உறவினர் ஒருவருக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பியதோடு அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் பேசி ஆடியோவையும் அனுப்பியுள்ளார். அதில் பணத்துக்காக ஒரு கும்பல் தன்னை கடத்திச்சென்று விட்டதாகவும், தற்போது எங்கு இருக்கிறேன் என தெரியவில்லை எனவும் கூறியிருந்தார். இந்த ஆடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் உண்மையிலேயே கடத்தப்பட்டாரா அல்லது பணத்துக்காக நாடகமாடுகிறாரா என்பதை கண்டறிய இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு வங்கி காசாளரை பிடிக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் இதன் பின்னணி என்னவென்று தெரியவரும்.