கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
குன்னூர்,
தமிழகத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை போன்ற நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, கால்நடைகளுக்கு தடுப்பு மருத்துகள் வழங்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே சோலடா மட்டம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஊட்டி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி, கால்நடை டாக்டர் சதீஷ்குமார் கலந்துகொண்டனர்.
முகாமில் சோலடாமட்டம் கிராமத்திற்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலட்டு நீக்கம், சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை முகாமுக்கு அழைத்து வந்து மேற்கண்ட சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர். சிறந்த கிடாரிகளுக்கும், சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மைக்காகவும் 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.