நரிக்குறவர்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்

ஜோலார்பேட்டை அருகே நரிக்குறவர்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.

Update: 2022-06-15 13:47 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பார்சல் பகுதியில் உள்ள இதய நகரில் வசிக்கும் 32 நரிக்குறவர் குடும்பங்களுக்கான சிறப்பு குறை கேட்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து நரிக்குறவர் இன மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு மருத்துவப் பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் கலெக்டர் வழங்கினார்.

அதன்பிறகு கலெக்டர் கூறுகையில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் பகுதியில் 37 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டைகள், தகுதியுள்ள நபர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணைகள், 15 நபர்களுக்கு ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், 30 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 25 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் வருகையின் போது பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது என்றார்.

முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், சுகாதாரபணிகள் துணை இயக்குனர் செந்தில், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவர் மீனாட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்