கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

நெல்லை சந்திப்பில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-09-30 20:45 GMT

நெல்லை சந்திப்பு கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி ஜவுளி விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மார்ஜரி தியோடர் அதனை பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து, நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது. தற்போது பல புதிய வடிவமைப்புகளில் நவீன ரகங்களையும் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். கோவை மென்பட்டு சேலைகள், காஞ்சீபுரம், ஆரணி, தஞ்சை, திருப்புவனம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், தீபாவளிக்கு 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை நடைபெறும்.

நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம் மற்றும் பாளையங்கோட்டை விற்பனை நிலையம், டவுன் கீழரதவீதி செந்தில் விற்பனை நிலையம், வடக்கு ரதவீதி பட்டு மாளிகை விற்பனை நிலையம், நெல்லை புதிய விற்பனை நிலையம் என 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு பண்டிகை காலத்தில் ரூ3¼ கோடிக்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், காந்திமதி விற்பனை நிலைய மேலாளர் பேச்சியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்