திருப்பரங்குன்றம் கோவிலில் டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்த பிறகே சிறப்பு தரிசனம்

திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்யப்படும் நடைமுறைக்கு வந்தது.

Update: 2023-02-23 21:23 GMT

 திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்யப்படும் நடைமுறைக்கு வந்தது.

சிறப்பு தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே சமயம் திருவிழா மற்றும் திருமண முகூர்த்தம் உள்ள முக்கிய நாட்களில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் கைப்பட ரூ.50, ரூ.100 என்று எழுதி தனித்தனியாக டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கையிலான எந்திரத்தை பயன்படுத்தி டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.

அதன்பின்னர் நவீன முறையில் இந்துசமய அறநிலையத் துறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தனி சாப்ட்வேரை பயன்படுத்தி கணினி மூலம் ஒரே டிக்கெட்டில் எத்தனை நபர் என்று குறிப்பிட்டு அதன்படி மொத்த ரூபாயை ஒப்பிட்டு ஒரே டிக்கெட்டாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கான வழியில் சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகிறார்கள்.

டிக்கெட்டுகள் ஸ்கேனிங்

இந்த நிலையில் கோவிலில் முதல்முறையாக புது நடைமுறையாக நேற்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட்டினை எந்திரத்தில் "கியூ ஆர் கோடு" ஸ்கேனிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் புதிய ஸ்கேன் மிஷன் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது டிக்கெட்டினை ஸ்கேனிங் செய்த பிறகே கோவிலின் கருவறைக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார்கள். இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் நடைமுறை மூலம் ஒரு நாளைக்கு எத்தனை பேர் சிறப்பு தரிசனம் செய்துள்ளனர், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு வருமானம் எவ்வளவு? என்பது வெளிப்படையாக இந்துசமய அறநிலையதுறைக்கு உட்பட்ட இணையதளம் மூலம் உடனுக்குஉடன் தெரிந்துகொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

80 கேமராக்கள் கண்காணிப்பு

மேலும் அவர் கூறும்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்வதுபோலவே அர்ச்சனை டிக்கெட் உள்பட அனைத்து கட்டண டிக்கெட்டு விவரங்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவிலை பொறுத்தவரை 80 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் 20 கேமராக்கள் இந்துசமய அலுவலகத்துடன் நேரடி பார்வைக்கு இணைக்கப்பட்டு கமிஷனரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலுக்கு பக்தர்கள் வருகை, கூட்ட நெரிசல் உள்பட குறை, நிறைகளை கமிஷனர் நேரடியாக தெரிந்துகொள்கிறார். சிலசமயங்களில் கமிஷனர் உத்தரவு குறைகளை தவிர்ப்பதற்கு வாய்ப்பாக உள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்