மூலவர் சிலையை பாதுகாத்து ஆராய சிறப்பு குழு
பழனி முருகன் கோவிலில் மூலவர் சிலையை பாதுகாத்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் உள்ள மண்டபங்கள் தூய்மை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள், கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை நடைபெறுகிறது. இந்தநிலையில் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கும்பாபிஷேகத்தின்போது மூலவர் சிலையை பாதுகாத்திடவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஆன்மிகவாதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி, சிற்ப சாஸ்திரம் கற்று அறிந்த ஸ்தபதிகள், ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள், பழனி ஸ்தல அர்ச்சகர்கள் பிரதிநிதி கும்பேஸ்வர குருக்கள், ஆகம வல்லுனர் செல்வசுப்பிரமணிய குருக்கள், பழனி திருமஞ்சன ஊழியர்கள் பிரதிநிதி பழனிசாமி, சென்னை தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, ஸ்தபதி செல்வநாதன், முதுகலை சித்த மருத்துவம் மற்றும் மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணைய அலுவலர் பிச்சையாகுமார், வேலுசாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.