சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு மையம் 2 நாட்களில் 34 பேர் விண்ணப்பித்தனர்

சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 2 நாட்களில் 34 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2022-06-21 22:07 GMT

கருப்பூர், 

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கல்லூரி முதல்வர் மலையாள மூர்த்தி நேற்று முன்தினம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இது குறித்து அவர் கூறும் போது,'என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க சேலம் மாவட்டத்தில் 3 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படிகருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் சோனா கல்லூரியில் சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவ-மாணவிகள் இணையவழி மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இதற்காக கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் 50 கணினிகள் தயார் நிலையில் உள்ளன' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் அறிவழகன், வசதி மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

34 பேர் விண்ணப்பம்

கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் 16 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.

நேற்று 2-வது நாளில் 18 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தனர். இந்த கல்லூரியில் மட்டும் 2 நாட்களில் 34 மாணவர்கள் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.

இது குறித்து கல்லூரி பணியாளர்கள் கூறும் போது, 'கிராமப்புற மாணவர்கள் வருவதால் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் விவரங்களை பதிவு செய்ய 1 மணி நேரம் முதல் 1½ மணி நேரம் வரை ஆகிறது.

மேலும் தொலை பேசி மூலம் 52 பேர் இதுவரை விண்ணப்பம் செய்வது குறித்து விசாரித்து உள்ளனர்என்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்