பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள்

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

Update: 2023-06-17 18:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ேநற்று நடைபெற்றது. முகாம் நடைபெறும் இடத்திலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள் மின்னணு மூலம் சான்று ஒப்பம் அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாம்களில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் சாதிச்சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்று, பிறப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதர சான்றுகளை பெற்று சென்றனர். தா.பழூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற முகாமில் 138 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 48 வருமான சான்றிதழும், 36 சாதி சான்றிதழும், 41 இருப்பிட சான்றிதழும், 13 முதல் பட்டதாரி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் எவ்வித சிரமமும் இன்றி எளிதாக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று சென்றனர் என்றனர். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.க்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), தாசில்தார் கண்ணன், பள்ளி கல்வி ஆய்வாளர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்