வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.
ஆதார் எண் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்காக படிவம் 6-பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் படிவம் 6-பி-யில் தங்கள் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொண்டனர்.
இ-சான்றிதழ்
அரியலூர் மாவட்டம் ஒ.கூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டா் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களுக்கு முகாம் குறித்து அறியும் வண்ணம் அறிவிப்பு செய்திடவும், பள்ளி வளாகத்தில் முன்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் பெரம்பலூர், எளம்பலூரில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் கீழ் தங்களது ஆதார் எண்ணினை தாமாகவே முன்வந்து இணையவழியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே வாக்காளர்கள் நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் (https://www.nvsp.in), வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப் (https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen-amp;hl=en), வோட்டர்ஸ் போர்ட்டல் (https://voterportal.eci.gov.in) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ள வேண்டும்.
குறியீட்டு எண்
அதற்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணை தனியாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தின் முகவரிக்கு சென்று உங்களது மொபைல் எண்ணையும், ஓ.டி.பி. எண்ணையும், ஏற்கனவே குறித்து வைத்துக் கொண்டுள்ள குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்தால் கிடைக்கும் இ-சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தெரிவித்தனர்.