வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
சிறப்பு முகாம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த 9-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் நடைபெறுகிறது. மேலும் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைதிருத்தங்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கலெக்டர் ஆய்வு
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நகல் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை வாக்காளர்கள் பார்வையிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ்.ஐ ஹோபர்டு நடுநிலைப ்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாமை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வந்த இளைஞர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்குவதை பார்வையிட்டார். இதேபோல் சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தற்போதைய முகாமில் கலந்துகொள்ள முடியாத பொதுமக்கள், அந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார்.