மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அப்துல் முனிர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் எளிதில் கல்விக்கடன் பெறும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இதையொட்டி வேலூர் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் பல்வேறுதுறை உயர்அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கல்விக்கடன் சிறப்பு முகாம்
மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, கூட்டுறவு வங்கிகள், வங்கி கிளைகளின் எண்ணிக்கை, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை அலுவலர்கள் சேகரிக்க வேண்டும்.
கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு அதில் ஒவ்வொரு கல்லூரியின் சார்பாக ஒரு நபரையும், வங்கியில் இருந்து ஒரு பிரதிநிதியையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். இக்குழுவில் கல்விக்கடன் குறித்த விவரங்கள் அவ்வப்பொழுது பதிவிடப்பட வேண்டும்.
கல்விக்கடன் தேவைப்படுகின்ற மாணவ-மாணவிகள் வித்யாலட்சுமி என்ற போர்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி அளிக்க ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 2 மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். கல்விக்கடன் முகாம் தேதி மற்றும் இடம் ஒருங்கிணைப்பு குழுவின் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.
முழு ஒத்துழைப்பு
வேலூர் மாவட்டத்தில் கல்விக்கடன் தேவைப்படுகின்ற அனைத்து மாணவர்களும் உரிய முறையில் நல்ல வழிகாட்டுதலோடு கல்விக்கடன் பெறவும், அவர்கள் அதை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திருப்பி செலுத்தும் வகையிலும் விவரங்களை அளித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்கள், வங்கியாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், கூட்டுறவு சங்கங்கங்கள், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட தொழில் மையம் உள்பட பல்வேறுதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.