பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு முகாம்

முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2023-08-23 19:05 GMT

முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடத்திட அரசால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திட்டத்தில் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள் ஒப்புகை ரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத்தொகை கிடைக்க பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கி கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) 2 வண்ண புகைப்படம் ஆகிய உரிய சான்றுகளுடன், மேற்குறிப்பிட்ட தினங்களில் நடைபெற உள்ள சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த சிறப்பு முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு, 91500 57749 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்