தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காத தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காத தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, செயலியில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதற்காக ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகளில் இரு கட்டங்களாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தகுதியான பெண்களின் வங்கி கணக்கில் கடந்த 14-ந்தேதியே ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. இதனால் பணம் கிடைக்காத பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
பணம் கிடைக்காதவர்கள், என்ன காரணத்திற்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த குறுந்தகவல் வராத பெண்கள் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் பெண்களிடம் ஸ்மார்ட் கார்டு (ரேஷன் கார்டு) எண்ணை செயலியில் பதிவு செய்து, நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அலுவலர்கள் விளக்கி கூறினார்கள்.
சிறப்பு முகாம்
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி தாலுகாவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மொத்தம் 94 ஆயிரத்து 974 ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். இதில் 62 ஆயிரத்து 447 பேர் கலைஞரின் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செயலியில் பதிவேற்றம் செய்தனர். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 14-ந் தேதி அன்றே ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இதில் உரிமைத்தொகை கிடைக்காத தகுதியான பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் 510 பேர் வந்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.