வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இந்த மாதம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி தற்போது நடந்து வருகிறது.
அன்றையதினம் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7ல் பூர்த்தி செய்யவும். வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம்-8 போன்றவற்றை பூர்த்தி செய்து தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் 9-ந்தேதி முதல் படிவம் வழங்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.