மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்-கலெக்டர் தகவல்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-18 18:45 GMT


மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்டமாக 695 முகாம்களும், இரண்டாம் கட்டமாக 134 முகாம்களும் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தற்போது வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்திலுள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும், முதற்கட்ட முகாம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க விடுபட்ட பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொருட்டு இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்

இச்சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்படவுள்ளன. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயன் பெறத் தகுதி வாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்