நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு 4 சிறப்பு பஸ்கள் புறப்பட்டது.
இதை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாக இயக்குனர் மோகன் தொடங்கி வைத்தார். இந்த 4 சிறப்பு பஸ்களில் 215 பக்தர்கள் பயணம் செய்தனர். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பொது மேலாளர் சரவணன், துணை மேலாளர்கள் சசிகுமார், சுப்பிரமணியன், கண்ணன், சங்கரநாராயணன், கிளை மேலாளர்கள் சிவன்பிள்ளை, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு பைகள்
மேலும் நவகைலாய சிறப்பு பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், நவகைலாயம் குறித்த விளக்க புத்தகம் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.
இந்த பஸ்கள் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர் (செங்காணி), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய நவகைலாய கோவில்களை சென்றடைந்து மீண்டும் நெல்லை புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது.
இந்த சிறப்பு பஸ் வருகிற 25-ந் தேதி மற்றும் ஜனவரி 1, 8-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு காலை 8 மணி முதல் இரவு 8 மணி செய்து கொள்ளலாம் என்று நெல்லை போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.