பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள்

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்ட நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்குவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2023-01-23 17:36 GMT

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்ட நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்குவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவன்மலை

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் வரும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலேசனைக் கூட்டம் நேற்று சிவன்மலைமீது உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமை தாங்கினார். காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) அன்னக்கொடி, காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அடிப்படை வசதி

இதில் தேரோட்டம் நடைபெறும் நாட்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதாராத்தை மேம்படுத்த கூடுதல் பணியாட்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் ஏனைய இடங்களில் 160 கண்காணிப்ு கேமராக்களை பொருத்துவது, பாதுகாப்பு பணியில் 250 போலீசாரை ஈடுபடுத்துவது, மின்சார வயர்களை பிவிசி பைப்புகள் மூலம் கொண்டு செல்வது, பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ வாகனங்களை தயார் நிலையில் வைப்பது, மலையடிவாரத்தில் நெரிசலைக் குறைக்க தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பக்தர்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல கூடுதல் பஸ்களை போக்குவரத்துதுறை மூலம் இயக்குவது, உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்களை கடைக்காரர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க, கடைகள் ஏலம் எடுப்பவர்களிடம் இதை கண்டிப்பாக நடைமுறைபடுத்த வலியுறுத்த வேண்டும். மேலும் இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரசாயனம் கலந்த வண்ண பொடிகளை பயன்படுத்தி உணவு பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ஜவகர், காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்