ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்

ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2022-05-24 16:19 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டதன் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டப்பணிகள் திட்டத்தின்கீழ் 9 வட்டாரங்களில் 1,160 மையங்களில் 1,24,434 குழந்தைகள் உள்ளனர். இம்மையங்கள் வாயிலாக மாதந்தோறும் குழந்தைகளின் எடை, வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 6 வயது வரை வயதிற்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் உயரத்திற்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என மொத்தம் 200 குழந்தைகள் கண்டறியப்பட்டது. இக்குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகப்படுத்திட ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தனி கவனம்

இதில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் மேம்பட்டு உள்ளன. சில குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் குறைவாக உள்ளன. ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து ஊட்டச்சத்து மேம்பாடு அடைய தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் நல அலுவலர்கள், பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை வாரந்தோறும் கண்காணித்து தொடர்ந்து ஊட்டச்சத்து உணவு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் மைய அமைப்பாளர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்