சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வலங்கைமான்:
ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசனம்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள வைத்தீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நடராஜருக்கு அபிஷேகம்
இதேபோல் கைலாசநாதர் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், மற்றும் நல்லூர், ஊத்துக்காடு, ஆவூர், கோவிந்தகுடி, கீழவிடயல், ஆண்டாங்கோவில் ஆவூர், களத்தூர், விளத்தூர், அவலிவநல்லூர், அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
குடவாசல்
குடவாசல் அருகே செருகுடி சூட்சமபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு நடராஜப்பெருமான், மங்களாம்பிகை திருநடனக்காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவகாமி அம்மையார் சமேத நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் நடராஜப்பெருமான், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.சுவாமி வீதி உலாவும் நடந்தது.
ஆபத்சகாயேஸ்வரர்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், ரிஷியூர் கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில்நடராஜருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 4 மணியில் இருந்து யாகமும், அபிஷேக ஆராதனை அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.