ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் கோவில்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் தமிழர் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவில் அற்புதமான கட்டிட கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இன்று உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் கட்டிட கலைநுட்பத்துக்கு சான்றாக யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. இத்தகைய தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் பெரியகோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்டவற்றால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பெரிய கோவிலில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.