மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சீலாத்திகுளம் அரசு பள்ளி முன்புபஸ் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு-சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சீலாத்திகுளம் அரசு பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க சபாநாயகர் அப்பாவு முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-03-15 20:08 GMT

ராதாபுரம்:

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சீலாத்திகுளம் அரசு பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க சபாநாயகர் அப்பாவு முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

1 கிலோ மீட்டர் நடந்து செல்லும் மாணவர்கள்

ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் சீலாத்திகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த சபாநாயகர் அப்பாவுவைப் பார்த்து மாணவ-மாணவிகள் கையசைத்தனர். உடனே காரை நிறுத்தி விட்டு மாணவ-மாணவிகளிடம் சபாநாயகர் அப்பாவு நலம் விசாரித்தார்.

பஸ் நிறுத்தம்

அப்போது சபாநாயகரிடம் பேசிய மாணவ-மாணவிகள், சீலாத்திகுளம் அரசு பள்ளி முன்பு பஸ்கள் நிற்காததால், ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதாக கூறினர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சபாநாயகர், மாணவர்களை அரசு பஸ்சில் பள்ளிக்கூடம் அருகில் இறக்கி விடுமாறு கூறினார். மேலும் சீலாத்திகுளம் பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கவும், அங்கு அனைத்து பஸ்களும் நின்று மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதன்படி அனைத்து பஸ்களும் பள்ளியின் முன்பாக நின்று மாணவர்களை ஏற்றி சென்றது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது, ராதாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி உடனிருந்தார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், தாசில்தார் வள்ளிநாயகம், வருவாய்த்துறையினர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்