குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தை விண்வெளி விரிகுடாவாக மாற்றுவதற்கு விண்வெளி பூங்கா திட்டம் உதவும் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.;
சென்னை,
சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் கடலோரத்தில் அரைவட்ட வடிவில் 2,376 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.950 கோடி செலவில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ), குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் விண்வெளி தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைய உள்ளது. இதற்காக விண்வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக டிட்கோ தெரிவித்துள்ளது.
ராக்கெட் உதிரிபாகங்களை தயாரிப்பது, மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள் மற்றும் ராக்கெட் தொடர்பான பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கிட இந்த தொழிற்சாலை மற்றும் உந்துசக்தி பூங்கா பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டவுடன் தமிழகத்தை விண்வெளி விரிகுடாவாக மாற்றுவதற்கு விண்வெளி பூங்கா திட்டம் உதவும் என டிட்கோ தெரிவித்துள்ளது.