தெற்கு ரெயில்வே உத்தரவை திரும்பப் பெற்றது: சென்டிரல் ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கியில் அறிவிப்புகள்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பழைய முறையில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்தது.;
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், நடைமேடை குறித்த தகவல்களை தெரிவிக்கும் ஒலிபெருக்கி நடைமுறை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. ரெயில்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் ரெயில் நிலையத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் மட்டுமே ஒளிபரப்பப்படும் எனவும், இனிமேல் ரெயில் நிலைய ஒலிபெருக்கி பயன்பாட்டில் இருக்காது என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சோதனை முறை திட்டத்தை கைவிடுவதாகவும், மீண்டும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பழைய முறையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இனி சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகளை பயணிகள் கேட்கலாம்.