தென்னிந்திய அளவிலான தடகள போட்டி: ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதலில் தங்கப்பதக்கம்
தென்னிந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.;
தெலங்கானா மாநிலம் வாராங்காலில் தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி, கேரளா உள்பட 7 மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ராமநாதபுரத்தை சேர்ந்த நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன் என்பவரின் மகள் ஐஸ்வர்யா (வயது19) 20 வயதுக்குட்பட்டோருக்கான வட்டு எறிதல் போட்டியில் 37.07 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஐஸ்வர்யா ராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சாதனை படைத்த மாணவியை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். ஐஸ்வர்யா கோவையில் வரும் 6-ந் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். தங்கம் வென்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவி ஐஸ்வர்யா வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய தடகள போட்டிகளில் இதுவரை 85 தங்கப்பதக்கம், 16 வெள்ளி பதக்கம், 6 வெண்கல பதக்கம் உள்பட 145 பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.