திருச்சியில் தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கான ஆக்கி போட்டி
திருச்சியில் தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கான ஆக்கி போட்டி நடைபெற்றது.
20-வது தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான காஜாமியான் கோப்பை ஆக்கி போட்டி திருச்சி ஜமால்முகமது கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை கல்லூரி பொருளாளர் ஜமால்முகமது, கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் அப்துல்காதர் நிகால், போட்டி செயலாளர் ஷாயின்ஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று நடந்த முதல் போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணியும், திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணியும் மோதின. இதில் 2-0 கோல் கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களில் சென்னை நாசரேத் கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவை டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி அணியையும், மதுரை அருளானந்தர் கல்லூரி அணி 2-0 கோல் கணக்கில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியையும் தோற்கடித்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் போட்டிகள் நடக்கின்றன.