மாமனாரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் கைது
குடும்ப தகராறுக்கு மாமனார் தான் காரணம் என்று மருமகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனை அருகே உள்ள மணியம்மை தெருவை சேர்ந்தவர் ஜமால் பாஷா (வயது 61). இவர் மொபட்டில் அலுமினிய பாத்திரங்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு மனிஷா, ஜெரினா என்று 2 மகள்கள் உள்ளனர். மனிஷாவிற்கும் ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த உறவினரான மன்சூர் அலிகானுக்கும் (32) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர்.
மன்சூர் அலிகானும் மொபட்டில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் மனிஷா கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். சிறிதுநேரத்தில் மன்சூர் அலிகான் மனைவியை அழைப்பதற்காக அங்கு சென்றார். வீட்டில் ஜமால் பாஷா அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இதைக்கண்ட மன்சூர் அலிகான் திடீரென அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து ஜமால் பாஷாவின் தலையில் போட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவிக்கு பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, மன்சூர் அலிகானை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், குடும்ப தகராறுக்கு மாமனார் தான் காரணம் என்பதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்தேன் என்றார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மன்சூர் அலிகானை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரின் தலையில் மருமகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.