தாயை கத்தியால் வெட்டிய மகன் கைது

சொத்து தகராறில் தாயை கத்தியால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-17 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே அரசடிகுப்பத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 68) விவசாயி. இவரது மனைவி புஷ்பாவதி (60). இவர்களுக்கு. தணிகைவேல், தங்கமணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில். மூத்த மகன் தணிகைவேல் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். இளைய மகன் தங்கமணி கோயம்புத்தூரில் மனைவியுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

தணிகைவேல் வசித்து வரும் வீடு மற்றும் 4 சென்ட் இடம் ரத்தினசாமி பெயரில் இருந்தது. இதை வைத்து கடன் வாங்குவதாக கூறி ஏமாற்றி தனது பெயருக்கு எழுதி தணிகைவேல் வாங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் பெற்றோருக்கும், தணிகைவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தணிகைவேல் தனது பெற்றோருக்கு உணவு வழங்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லும்படியும் கூறி வந்துள்ளார். இதனிடையே தந்தையிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய வீடு மற்றும் இடத்தை தணிகைவேல் தனது மனைவி சவுண்யாவுக்கு செட்டில்மெண்ட் செய்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. .

கத்தி வெட்டு

இந்த நிலையில் தனது வீடு மற்றும் இடத்தை தணிகைவேலிடம் இருந்து மீட்டு தருமாறு ரத்தினசாமி கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தணிகைவேல், வீட்டில் இருந்த தனது தாயார் புஷ்பாவதியை இதற்கெல்லாம் காரணம் நீதானே என கேட்டு கத்தியால் வெட்டியதாக தெரிகிறது.

மேலும் சவுண்யாவும், புஷ்பாவதியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த ரத்தினசாமியையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகைவேலை கைது செய்தனர். மேலும் சவுண்யாவை தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் தனது தாய் என்றும் பாராமல் கத்தியால் மகனே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்