ஓசூர்
மாநகராட்சி கூட்டம்
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் சத்யா பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
துணை மேயர் ஆனந்தய்யா (தி.மு.க):- 7-வது வார்டுக்குட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேறி ஏரியில் கலக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதேபோல் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்தும், ேசதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆரம்ப சுகாதார மையம்
தி.மு.க. கவுன்சிலர் சீனிவாஸ்:-
எனது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தி தருமாறு கடந்த 6 மாதமாக கேட்டு வருகிறேன். யாரும் கண்டு கொள்ளவில்லை. கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து 2 மாதமாகிறது. குப்பைகளும் சரியாக அகற்றுவதில்லை. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் எதையும் பூர்த்தி செய்வது இல்லை என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ்:- எனது வார்டு பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டது. அதை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்களின் நலனுக்காக, ஓசூர் சிஷ்யா பள்ளி அருகே ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து தரவேண்டும் என்றார்.
நடவடிக்கை
இதற்கு பதிலளித்து ஆணையாளர் சினேகா பேசுகையில், மாநிலம் முழுவதும் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார மையங்களை முதல்-அமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர்.