புகையிலை பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு சீல்வைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது.

Update: 2022-07-08 15:14 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் இணைந்து புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்த மேலும் 7 கடைகள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த கடைகளை மூடி சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் உணவு வணிகர்கள் யாரேனும் மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதேபோன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள், டாக்டர் ரேணுகா மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அந்த கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். இதே போன்று ஒரு கடையில் இருந்த பாலித்தீன் பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆக மொத்தமாக மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்