விவசாயிகளுக்காக மின்னணு வடிவில் மண்வள அட்டை
தமிழக அரசின் தமிழ் மண்வளம் என்ற இணையதளம் வழியாக விவசாயிகளுக்காக மின்னணு வடிவில் மண்வள அட்டை வழங்கப்படுகிறது என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
மதுரை,
தமிழக அரசின் தமிழ் மண்வளம் என்ற இணையதளம் வழியாக விவசாயிகளுக்காக மின்னணு வடிவில் மண்வள அட்டை வழங்கப்படுகிறது என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
மண் நிலை
இது குறித்து மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:-
"தமிழ் மண் வளம்" என்பது புல எண் வாரியாக மண்ணின் ஊட்டச்சத்து நிலை அதற்கேற்ற உரம் பரிந்துரை மற்றும் மண்ணிற்கு ஏற்ற வேளாண், தோட்டக்கலை மற்றும் மரப்பயிர்கள் பரிந்துரை வழங்குவதற்கு என்று உருவாக்கப்பட்ட இணைய முகப்பு ஆகும்.
"தமிழ் மண் வளம்" இணைய முகப்பு அனைத்து மாவட்டங்களிலும் 2015-16 முதல் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளின் தரவுகளை தொகுத்து புல எண் வாரியாக விவசாயிகளின் பெயருடன் மண் வள அட்டை தாங்களாகவே பெறும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
இணைய முகவரி
விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam/ எனும் இணையதள முகவரியில் தமிழ் மண்வளம் இணைய தளத்தை அணுகலாம். இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, விவசாயிகளின் கைபேசியில் மண் வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.
இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மண்டல வாரியாகவும் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன.
சாகுபடி பரிந்துரை
மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர் அமில நிலை, அங்கக கரிமம், சுண்ணாம்பு தன்மை போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விவரங்களும், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் போன்ற விவரங்களும், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் விவரங்களும் தரப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் காடுகள் சார்ந்த பயிர்களில் எவ்வகை பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்ற விவரங்களும், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரம் அளிக்க வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளும் மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.