உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நகராட்சி சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு உள்ளது.நகராட்சிக்கு வருமானத்தை ஈட்டி தரக்கூடிய இந்த கடைகள் பொது ஏலம் மூலமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டப்பட்டுள்ள இந்த கடைகள் மூலம் பல்வேறு தரப்பினர் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அதன்படி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உடுமலை நகரப் பகுதியில் மொத்தம் 291 கடைகள் உள்ளது.இதில் 216 கடைகள் முறைப்படி ஏலம் விடப்பட்டு நடைமுறையில் இயங்கி வருகிறது. 75 கடைகள் ஏலம் எடுக்காமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்த கடைகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது.
அதில் பொதுமக்கள்,வியாபாரிகள் கலந்து கொண்டு 9 கடைகளை ஏலம் எடுத்தனர். மீதமுள்ள 66 கடைகளுக்கு உரிய முறையில் அறிவிப்பு விடப்பட்டு பொது ஏலம் விடப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது உடுமலை நகர மன்றத்தலைவர் மத்தீன் உள்ளிட்ட அலுவலகப்பணியாளர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.