படிப்பதன் மூலம்தான் சமுதாயம் முன்னேற முடியும்

படிப்பதன் மூலம்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2022-11-01 18:02 GMT

படிப்பதன் மூலம்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கிராமசபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர் குப்பம் ஊராட்சி ஜங்கலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் கு.செல்வராசு திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

பிரச்சினைகள் தீர்க்கப்படும்

கிராம நிர்வாகம் சிறப்பாக நடந்தால் தான் அரசாங்கம் வளர்ச்சி பெரும். கிராமம் வளர்ச்சி பெற்றால் தான் அந்த மாவட்டம் வளர்ச்சி பெறும். அடிப்படை வளர்ச்சிக்கு கிராமங்கள்தான் முக்கியம். கலைஞரின் பார்வை கிராமத்தை நோக்கி இருந்ததால் தான் இன்று பல கிராமங்கள் சிறு சிறு நகரங்களாக வளர்ச்சி பெற்றது.

கிராம சபை கூட்டம் நடத்துவதன் மூலமாக பல பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது. வருடத்துக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு கிராமத்து பிரச்சினைகள் மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக தீர்க்கப்படும்.

படிப்பதன் மூலம்

ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் அந்த சமுதாயம் படித்திருக்க வேண்டும். அந்த வகையில் முதல்-அமைச்சர், பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். எனவே அனைத்து பெண்களும் இதனைப் பயன்படுத்தி உயர்கல்வி படித்து முன்னேற வேண்டும். படிப்பதன் மூலமாகத் தான் சமுதாயம் முன்னேற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து 62 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத் துறை, பட்டுவளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்கள்.

நிகழ்ச்சியில் மகலிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, வேளாண் துணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திமா, நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் எம்.வெண்மதி முனிசாமி, துணைத்தலைவர் தேவராஜ், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, ரகு குமார், தாசில்தார் க.குமார், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்