சமூக வலைத்தளங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது

சமூக வலைத்தளங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்று ஊட்டி அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா பேசினார்.

Update: 2023-04-29 18:45 GMT

ஊட்டி, 

சமூக வலைத்தளங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்று ஊட்டி அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா பேசினார்.

பட்டமளிப்பு விழா

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா கலந்துகொண்டு 270 இளநிலை, 30 முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டமளிப்பு தினம் நம் வாழ்வில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. நமது கல்விப் பயணம் வெற்றிகரமாக நிறைவுற்றால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வாழ்க்கை என்பது 10 சதவீதம் உங்களுக்கு என்ன நடக்கிறது, 90 சதவீதம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்களை பெற்றுள்ளீர்கள். அது எதிர்கால முயற்சிகளுக்கு துணை நிற்கும்.

மதிப்பு முக்கியம்

உங்கள் வாழ்க்கையையும், சமூகத்தையும் மாற்றுவதற்கு கல்வியே சிறந்த ஊக்க சக்தியாக உள்ளது. உலகம் மாறும் போது, வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற சமீபத்திய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இயற்கை விவசாயம் பிரபலமடைந்து வருகிறது. தட்பவெப்பநிலைக்கு ஏற்ற விவசாயம் முக்கிய வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

சமீப காலமாக தொழில் முனைவோர் வளர்ந்து வருகின்றனர். வேலையை தேடுவதில் இருந்து வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். சிறிய ஸ்டார்ட்-அப்களில் தொடங்குவதன் மூலம் நீங்கள் வேலைகளை உருவாக்குபவராக மாறலாம். நிதி அதிகாரம் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியைத் தராது. மதிப்புகள் மிகவும் முக்கியம்.

தொழில்நுட்பம்

இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் செல்போன்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. தொழில்நுட்பத்தை சரியான காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதே போல, எந்த ஒரு நல்ல மாற்றமும் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை தொடங்கி, மற்றவர்களையும் அவற்றை நோக்கி அழைத்துச் செல்லுங்கள். இந்தியாவை வலுவான மற்றும் நிலையான உலகளாவிய தலைவராக உருவாக்குங்கள். உங்கள் கனவுகள் மற்றும் ஆர்வத்தை அடைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்