பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நாய்கள் கூட்டம்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-12 11:37 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசுவாசமானவை

நாய் நன்றியுள்ள பிராணி என்பதுடன், நல்ல நண்பனாகவும், காவலனாகவும் விளங்கக் கூடியதாகும். வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமல்லாமல் தெருநாய்களும், உணவிடுபவர்களுக்கு விசுவாசமானவையாகவே இருக்கின்றன. அதேநேரத்தில் நாய்களின் இனப் பெருக்க வேகம் அதிகமாக இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுற்றித் திரியும் நாய்கள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுவாக வெளியே சுற்ற அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான வீட்டு நாய்களும் தெருக்களிலேயே வளர்க்கப்படுகின்றன. அவை அந்த தெருவை தங்களுக்கான எல்லையாக வரையறுத்துக் கொள்வதால், தெருவுக்குள் நுழைபவர்களை அச்சுறுத்துவதுடன், சில வேளைகளில் கடிக்கவும் செய்கின்றன. இதுதவிர உணவு கிடைக்காமல் சுற்றித் திரியும் நாய்கள் குப்பைகளில் உள்ள கழிவுகளைத் தின்கின்றன.அப்போது ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பல சாலை விபத்துக்களுக்கு காரணமாகின்றன.

அறுவை சிகிச்சை

மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரோட்டில் அதிக எண்ணிக்கையில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களால் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், சாலை வியாபாரிகள், பிச்சைக்காரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலங்களாக ஆடு, கோழி, கன்று உள்ளிட்ட கால்நடைகள் நாய்களால் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் குழந்தைகளை நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதனால் குழந்தைகளை வெளியே அனுப்பவே பெற்றோர் அஞ்சும் நிலை உள்ளது.இதுதவிர ரேபிஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோயை சுமந்து சுற்றும் நாய்களை அடையாளம் காண முடியாத நிலையும் உள்ளது.இந்தியாவில் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரேபிஸ் தடுப்பூசிக்காகவே பெருமளவு நிதி செலவிடப்படுகிறது. எனவே நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக செலவிடப்படும் நிதியின் மூலம் உயிரிழப்புகளை குறைப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

கருத்தடை அறுவை சிகிச்சை

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டம் ஒருசில நகரப்பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன.பெயரளவுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம் நாய்களின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவதில்லை என்பதே உண்மை நிலவரமாக உள்ளது. குமரலிங்கத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கெனெவே கட்டப்பட்ட அறுவை சிகிச்சைக் கூடம் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது.அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நாய்களின் எண்ணிக்கையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.



-

Tags:    

மேலும் செய்திகள்