பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளம்

பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலியான இணையதளம் தொடங்கி, அதன் மூலம் பணத்தை ஏமாற்றும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Update: 2023-10-21 14:37 GMT

போடிப்பட்டி

பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலியான இணையதளம் தொடங்கி, அதன் மூலம் பணத்தை ஏமாற்றும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம்

அண்ணாச்சி கடையிலே போய் அரைக்கிலோ துவரம்பருப்பு வாங்கிட்டு வா என்று வீட்டு குழந்தைகளை அனுப்பி வைப்பது ஒரு காலமாக இருந்தது. அந்த வர்த்தகத்தில் விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கு இடையே ஒரு கண்ணுக்கு தெரியாத பந்தம் இருந்தது. ஆனால் குண்டூசி முதல் கொத்து பரோட்டா வரை ஆன்லைன் மூலம் வாங்க முடிகிறது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் இத்தகைய ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலியான இணையதளம் தொடங்கப்பட்டு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் பலர் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

இன்றைய நிலையில் ஆன்லைன் வர்த்தகம் என்பது பல ஆயிரம் கோடிகள் புழங்கும் மிகப் பெரிய வர்த்தகமாக உள்ளது. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் குடும்பத்தலைவிகளும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி குவித்து வருகின்றனர். இதுவே பல குடும்பங்களில் பூதாகரமான பிரச்சினையாக உருவாக்கி வருகிறது.

சிறு வணிகர்கள் பாதிப்பு

அதேநேரத்தில் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்பது மட்டுமல்லாமல், தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கிறது என்பதும் ஆன்லைன் வர்த்தகத்தை விரும்புவதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு சேலை வாங்க விரும்பினால் ஜவுளிக்கடைக்கு சென்று பல மணி நேரம் செலவு செய்ய வேண்டியதுள்ளது. பிடித்த சேலையை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆனால் ஆன்லைனில் நமது பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல, விரும்பிய டிசைன்களில், விரும்பிய வண்ணங்களில் சேலையை எளிதாக தேர்வு செய்ய முடிகிறது என்பது பலருடைய கருத்தாக உள்ளது. இத்தகைய ஆன்லைன் வணிகத்தால் பல சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்து வருகிறது.

இந்தநிலையில் பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சில பொருட்களுக்கு, சில நிமிடங்கள் மட்டும் அதிரடி விலை குறைப்பை வெளியிட்டு, மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் இந்த விலை குறைப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த சமயங்களில் பலரும் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இதனை சாதகமாக பயன்படுத்தி ஒருசிலர் ஏமாற்று வேலையில் இறங்கியுள்ளனர்.

அதிரடி விலை குறைப்பு

இரவு நேரங்களில் பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலா வரும்போது, திடீரென்று பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயரில் விளம்பரம் வருகிறது.அந்த விளம்பரத்தில் அதிரடி விலை குறைப்பு அரை மணி நேரம் மட்டுமே'என்பது போன்ற ஆங்கில வாசகங்கள் காணப்படுகின்றன.பிரபல நிறுவனத்தின் ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ரூ. 499 மட்டுமே! ரூ. 17 ஆயிரம் இயர் பட்ஸ் ரூ. 1 மட்டுமே! என்பன உள்ளிட்ட ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள் வருகின்றன.அந்த விளம்பரங்களை நம்பி அவர்களின் போலியான இணையத்தளத்துக்குள் சென்று பணம் செலுத்தி ஆர்டர் செய்தால் எந்த பொருளும் வருவதில்லை.

இவ்வாறு பணம் செலுத்தி பலரும் ஏமாந்துள்ளனர். ஆனால் சிறிய தொகை மட்டுமே ஏமாந்திருப்பதாலும், வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டும் பலர் இது குறித்து சைபர் கிரைமில் புகாரளிப்பதில்லை.அதேநேரத்தில் இவ்வாறு லட்சக்கணக்கானவர்கள் ரூ. 1 முதல் 499 வரை செலுத்தும்போது மோசடி நபர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்து விடுகின்றனர். எனவே இதுபோன்ற போலி இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.மேலும் இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது. விளம்பரங்களை நம்பி அதனுடன் இணைந்த லிங்க் மூலம் இணைய பக்கத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணைய தளத்தை நேரடியாக திறந்து அதன் மூலமே பொருட்களை வாங்க வேண்டும்.மிகக் குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் ஏமாறக் கூடாது.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்