வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தகுதியின் அடிப்படையில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்ய இதுவரை 4,99,302 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,21,046 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுகிறது. திருவண்ணாமலையில் தீப திருநாளையொட்டி ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு முகாம் டிசம்பர் 2, 3-ல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.