பட்டுக்கோட்டை பகுதியில் காலை 9 மணி வரை மூடுபனி

பட்டுக்கோட்டை பகுதியில் காலை 9 மணி வரை மூடுபனி இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன.

Update: 2023-02-07 19:27 GMT

பட்டுக்கோட்டை பகுதியில் காலை 9 மணி வரை மூடுபனி இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன.

பட்டுக்கோட்டையில் மூடு பனி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த வாரம் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு கடந்த 2 நாட்களாக காலை 7 மணி வரை பனிமூட்டம் இருந்தது. ஆனால் நேற்று காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு நீடித்தது.

சாலைகளில் செல்வோர் எதிரே வரும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் தடுமாறினர். பஸ், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் பனி மூட்டத்துக்கு நடுவே முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன. பனி மூட்டம் காரணமாக கடும் குளிரடித்தது. காலை 9 மணி வரை விடிந்ததே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நீடித்தது. அதன் பிறகு சூரிய ஒளி மெல்ல, மெல்ல பரவ ஆரம்பித்ததும் பனிப்பொழிவு படிப்படியாக குறைந்தது.

கரம்பயம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் இருந்தது. தை மாதத்தில் சூரியன் அதிகாலையில் உதிப்பது வழக்கம். காலை 6 மணிக்கு எல்லாம் சூரியன் உதித்து எவ்வளவு பனி மேகமாக இருந்தாலும் அது விலகி சென்று விடும். ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் செல்லக்கூடிய சாலையில் மூடுபனியாக இருந்தது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாமல் இரண்டு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு மெதுவாக சென்றன.

வழக்கமாக பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் சாலையில் ஏராளமானோர் நடை பயிற்சி செய்வார்கள். இதற்காக காலை 5 மணிக்கே மக்கள் அங்கு கூடி விடுவர். ஆனால் நேற்று பனி மூட்டம் காரணமாக நடைபயிற்சிக்கு குறைவான அளவே ஆட்கள் வந்தனர்.

முதல்சேரி- சேண்டாக்கோட்டை

பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் சாலையில் உள்ள முதல்சேரி, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், மாளியக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பகுதியில் நேற்று காலை 8 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்