கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற மினி லாரி விபத்தில் சிக்கியது
கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற மினி லாரி விபத்தில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரி ஒன்று சாலையின் மையப்பகுதியில் உள்ள சிமெண்டு தடுப்புடன் இணைந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியின் 2 பின்பக்க சக்கரங்களும் முழுமையாக சேதம் அடைந்து தனியாக சாலையில் கழன்று விழுந்தன. லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
போலீஸ் விசாரணையில் மேற்கண்ட மினி லாரியில் சென்னை திருவெற்றியூரில் இருந்து ஆந்திராவுக்கு 80 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த விபத்தால் அதிகாலை நேரத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வழக்கை ஆரம்பாக்கம் போலீசார், மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சென்னை திருவொற்றியூரை சேர்ந்த டிரைவர் கவுதம் (22), சாந்தகுமார் (29) மற்றும் சிலம்பரசன் (28) ஆகியோரை கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்த டிரைவர் கவுதம் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.