மின் கட்டண தொகை நிலுவையில் இருப்பதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி
மின் கட்டண தொகை நிலுவையில் இருப்பதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க போலீசார் அறிவுரை வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களாகிய உங்களுடைய செல்போன் எண்ணுக்கு இணையதள மோசடி நபர்களால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் தாங்கள் செலுத்தப்படாத மின் கட்டண தொகை நிலுவையில் உள்ளதால் உங்களுடைய இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் எனவும், உடனே எங்கள் உயர் அதிகாரிகளுக்கு இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் அதில் வரும் லிங்கை திறந்து அவை கேட்கும் விவரங்களை பதிவிடுங்கள் என்று கூறப்பட்டிருக்கும். அதனை நம்பி உங்களது விவரங்களை அதில் பதிவிடாதீர்கள். மேலும் மின்சாரதுறையில் இருந்து தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டியிருந்தால் நீங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மட்டுமே குறுஞ்செய்தி அனுப்புவார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.