உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்
உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம் குறித்து பொதுமக்கள்-நிபுணா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
அதிகரிப்பு
தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-
அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள்
உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன்: புகையிலை இரண்டு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று மெல்லும் புகையிலையாகவும், இரண்டாவது புகைக்கும் புகையிலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. புகையிலை சிகரெட், பீடி, சுருட்டு போன்ற விதங்களில் புகைக்கப்படுகிறது. இதனால், புகைப்பவருக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மெல்லும் புகையிலை ஹான்ஸ், குட்கா, கூல்-லிப், சுருள் புகையிலை என்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நரம்பு தளர்ச்சி ஏற்படும். ஆண்மை தன்மையும் பாதிக்கப்படும். இன்றைய இளைஞர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் புகையிலை உபயோகம் அதிகமாக உள்ளது. எனவே தான் பள்ளியை சுற்றி 100 மீட்டர் தொலைவில் புகையிலை பொருட்களை விற்கக் கூடாது என்றும், 18 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், புகையிலை பற்றிய விளம்பரங்களை ஊக்குவிக்க கூடாது என்றும் அரசு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல் மெல்லும் புகையிலை தடை செய்து உணவு பாதுகாப்பு சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
விற்பனையை தடுக்க வேண்டும்
பெண்ணாடம் சோழநகரை சேர்ந்த என்ஜினீயர் பிரபாகரன்: இன்றைய தலைமுறையினர்களில் பெரும்பாலானோர் மது மற்றும் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதற்கு காரணம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் பள்ளி பருவத்தில் இருந்தே புகை பிடிக்க தொடங்கி விடுகின்றனர். பள்ளி நாட்களில் விளையாட்டாக ஆரம்பிக்கும், அந்த பழக்கம் நாளடைவில் மாணவர்களை அடிமையாக்கி விடுகிறது. இதனால் சிலர் அதில் இருந்து மீள நினைத்தாலும், முடியாமல் தவிக்கின்றனர். அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
அபராதம்
நரசிங்கமங்கலம் என்ஜினீயர் மணிவேல்: புகை பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்படும் என அரசு சார்பில் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் புகை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்தும், தினசரி சிகரெட் பிடித்து வருகின்றனர். மேலும் பலர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி போதையிலே நடமாடுகின்றனர். இதுதவிர பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் இடங்களிலும் புகை பிடிப்பது, பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
தடை செய்ய வேண்டும்
சிதம்பரம் தீபக் குமாா்: சிகரெட், புகையிலை பொருட்களால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் புகைப்பவர்கள் மட்டுமின்றி, அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளியேற வேண்டும். சிலர் 'நாகரிகம் என்று நினைத்தும், தங்களை ஹீரோவாக எண்ண வேண்டும் என்பதற்காகவும் புகைபிடிப்பதால் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக்கூறினால் இன்றைய இளைய சமுதாயத்தினர் கேட்பதில்லை. சிறுவர்கள்கூட சிகரெட் வாங்கி புகைப்பதால், அவர்களது நலன் கருதி அதன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.
விழிப்புணர்வு வேண்டும்
சென்னையை சேர்ந்த இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார் கூறும்போது, 'இதயத்தில் ஏற்படும் பல நோய்களுக்கு புகைபிடிப்பது மிக முக்கிய காரணமாக அமைகிறது. இப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தநாளங்களில் கொழுப்பு அதிகம் படிகிறது. அதேபோல் புகைபிடிப்பவர்களுக்கு ரத்தக் கட்டிகள் உருவாகி இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தையும் தடுக்கிறது. சிகிச்சைக்கு வரும் இதய நோயாளிகளின் ரத்த நாளங்களில், புகைபிடிப்பதால் ஏற்படும் அடைப்பு காணப்படுகிறது. எனவே அதிகளவில் புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
ஞாபகமறதி நோய் வரும்
அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம் கூறும்போது, 'இளைய சமுதாயத்தினர் இடையே புகைபிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவுவது கவலை அளிக்கிறது. நரம்பியல் ரீதியாக பார்த்தால், புகைபிடிப்பதால் வாதநோய் வர 4 சதவீத வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஞாபகமறதி உள்ளிட்ட நரம்பியல் நோய்களுக்கும் புகைப்பழக்கம் வித்திடுகிறது.
நம் நாட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களில் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, 'கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்' என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, நம்மையும் மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.