புகை மண்டலம் அதிகமாக இல்லை: சென்னை மாநகராட்சி 14 மண்டலங்களில் காற்று மாசு குறைவு - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

போகியால் சென்னை பெருநகர மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்று மாசு குறைவாக இருந்தது. புகை மண்டலம் அதிகமாக இ்ல்லை என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-15 07:18 GMT

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப்பண்டிகையின்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. சென்னை பெருநகர மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்கள் எரிப்பது குறைந்துள்ளது.

இந்த ஆய்வின்படி நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம்-கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது.

காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 50 மைக்ரோகிராம்-கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 113 மைக்ரோகிராம்-கனமீட்டர் வரை இருந்தது. காற்று தர குறியீடு பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 135 என்ற அளவில் மிதமாக இருந்தது. அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 277 என்ற அளவில் மோசமாக இருந்தது என கண்டறியப்பட்டது.

அதன்படி, நடப்பாண்டில் போகிப்பண்டிகையின் போது சென்னை பெருநகர மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்றுத் தர குறியீடு மிதமான அளவுகளிலும், 1 மண்டலத்தில் (வளசரவாக்கம்) மோசமான அளவாகவும் இருந்தது தெரியவந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை விமான நிலையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு குப்பைகளை எரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததின்பேரில் பொது மக்கள் பெருமளவு குப்பைகளையோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகளையோ எரிக்கவில்லை. எனவே விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவையில் எந்த தடையும் ஏற்படவில்லை.

சென்னை மாநகரில் குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை, மிதமான காற்றின் வேகம் காரணமாக புகை மண்டலம் அதிகமாக தென்படவில்லை, இதனால் தொலைதூர காணும் தன்மை நன்றாக இருந்ததால், விமான புறப்பாடு மற்றும் வருகை போக்குவரத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என அறியப்பட்டது.

இந்தளவு காற்று மாசு அளவு குறைந்ததற்கு பொதுமக்களிடையே இருந்த விழிப்புணர்வும், டயர், டியூப், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்காமல் ஒத்துழைப்பு தந்ததும் முக்கிய காரணமாகும்.

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசு துறையினருக்கும், அரசுசாரா அமைப்பினருக்கும், குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும், செய்தி மற்றும் ஊடகங்களுக்கும் குறிப்பாக பொதுமக்களுக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்