சாலையை ஆக்கிரமித்தபடி புகை மண்டலம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்
தளி பகுதியில் வாளவாடி அருகே சாலையை ஆக்கிரமித்தபடி புகை மண்டலம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
தளி பகுதியில் வாளவாடி அருகே சாலையை ஆக்கிரமித்தபடி புகை மண்டலம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
சாலையை ஆக்கிரமித்த புகை மண்டலம்
அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் போக்குவரத்தின் பங்கு முக்கியமானதாகும்.
இதற்காக அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளித்து உதவி புரிகிறது. ஆனால் சாலையின் ஓரங்களில் சுயநல நோக்கோடு குப்பைகள் கொட்டப்பட்டு அதற்கு தீ வைக்கப்படுவதால் எழுகின்ற புகை சாலை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் எதிராக வருகின்ற வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாததால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
பல்வேறு தொழில்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போக்குவரத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். சாலைகள் எங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தந்தாலும் அதன் ஓரங்களில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகள் பல்வேறு விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்தி தருகிறது.
இந்த சூழலில் தளி அடுத்த வாளவாடி அருகே சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து சென்று விட்டனர். அதிலிருந்து எழுந்த புகை சுமார் அரை மணி நேரமாக சாலை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் சாலையில் நேர் எதிராக வந்த வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அவதிக்கு உள்ளாகினார்கள். சுயநல நோக்கோடு செயல்படுகின்ற ஒரு சிலரால் ஏதும் அறியாத அப்பாவிகள் விபத்தில் சிக்குவது வேதனைக்குரிய விஷயமாகும்.
எனவே பஞ்சாயத்து நிர்வாகங்கள் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் ஓரங்களை முழுமையாக சீரமைப்பதற்கும் அங்கு குப்பைகளைக் கொட்டி தீ வைக்க வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்ய வேண்டும்.
இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை பெற இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.