அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் பரிசு
தேவகோட்டை அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். அது படிப்படியாக சரிந்து கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் 13 மாணவர்களும், உயர்நிலைப் பள்ளியில் 9 மாணவர்களும் மட்டுமே இருந்தனர். தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகள் மூடும் நிலையில் இருந்ததால் புதிதாக பொறுப்பேற்ற ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டனர்.அதன்படி தனியார் பள்ளிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சுற்று சுவர் வர்ணம் பூசப்பட்டு கழிப்பறைகள் சுகாதார வசதியுடன் அமைக்கப்பட்டது. மேலும் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கற்காத்தக்குடி ஆரோக்கியசாமி 6 முதல் 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன், டேப் தருவதாக அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் தருவதாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் லாசர் அறிவித்தார். மேலும் மங்கலம் என்ற கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆட்டோ வாடகையும் ஆசிரியர்களே வழங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் உயர்நிலைப்பள்ளியில் இணையத்துடன் கூடிய கணினி வசதி, புெராஜெக்டர் போன்றவற்றையும் ஏற்படுத்தி உள்ளனர். இதற்காக அந்த பகுதி முழுவதும் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நல்ல பலனாக ஏராளமான மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மனச்செம்மல் தலைமையில் அந்த கிராம மக்கள் மலர் தூவி மாலை அணிவித்து பாராட்டி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது இரு பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்துள்ளது.